என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை பாமாயிலை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த விற்பனையாளர் சஸ்பெண்டு

- ரேஷன் கடையில் இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா ஆய்வு செய்தார்.
- 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.
சென்னிமலை, ஏப். 26-
சென்னிமலை டவுன் அப்பாய்செட்டி வீதியில் அம்மாபாளையம் பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
இந்த வங்கியின் சார்பாக சென்னிமலை டவுன் பசுவபட்டி, ராமலிங்கபுரம், எக்கட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் சென்னிமலை டவுன் அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் விற்பனையாளராக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த ரேஷன் கடையில் சம்பவத்தன்று இருப்புகளை சரிபார்க்க இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் இருப்புக்களை ஆய்வு செய்த போது 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.
அப்போது பாமாயில் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்காமல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அம்மாபாளையம் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சந்திரன் என்ற விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து துணைப்பதிவாளர் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் முழுமையான இருப்பு பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.