search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழமையான 6 அடி சிவலிங்க சிலையை வழிபடும் பக்தர்கள்
    X

    பழமையான 6 அடி சிவலிங்க சிலையை வழிபடும் பக்தர்கள்

    • பூமிக்கு அடியில் 6 அடி உயரம் சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர்.
    • இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் மெயின் ரோடு திருநகரில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரன் கோவில் இருந்தது.

    நாளடைவில் இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும் இந்த கோவிலில் இருந்த சிவலிங்க திருமேனி இல்லாமல் கருட கம்பம் மட்டுமே இருந்தது.

    இந்த நிலையில் அரண் பணி சிவனடியார் கூட்டம் சார்பில் இந்த சிவன் கோவிலை புனரமைத்து கட்ட முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி கோவிலை கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்து எந்திரங்கள் மூலமாக அங்கிருந்த கருட கம்பத்தை அகற்றினர்.தொடர்ந்து பணிகள் நடந்தன.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பணிகள் தொடர்ந்து நடந்தன. மதியம் எந்திரம் மூலமாக மண்ணை அகற்றிக் கொண்டிருந்தனர்.

    தொடர்ந்து 5 அடி வரை பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது. இதையடுத்து தொழிலாளர் அந்த பகுதியில் இருந்த மண்ணை அகற்றி விட்டு பார்த்தனர்.

    அப்போது பூமிக்கு அடியில் சுமார் 6 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர். இது குறித்து பொது மக்களுக்கு தெரிவித்தனர்.

    இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். இதை தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிவலிங்க சிலையை மீட்டு எடுத்தனர். அந்த சிலையை பொதுமக்கள் சுத்தம் செய்து பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் கூடாரம் அமைத்து அங்கு அந்த சிவலிங்கத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர்.

    இது பற்றி அறிந்ததும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து தொடர்ந்து சிவலிங்கத்தை வணங்கி சென்றனர்

    பிரதோஷம் தினத்தில் கோவில் திருப்பணியின் போது சிவலிங்க திருமேனி கிடைத்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

    Next Story
    ×