search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் நெல்லை கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள்
    X

    நெல் உலர வைக்கும் பணியில் விவசாயிகள்.

    சாலையில் நெல்லை கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள்

    • நெல்லின் ஈரப்பத அளவு 17.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க–ப்பட்டது.
    • நெல்லுக்கான‌ ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு அதிக அளவாக 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள–ப்பட்டிருந்தது.

    75 சதவீதம் குறுவை அறுவடை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி என்று பல்வேறு சுழற்சி மழையினால் பாதிக்கப்பட்டு குறுவை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேளாண்மை துறை கணக்கின்படி 75 சதவீதம் குறுவை அறுவடை நடைபெற்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அறுவடை நடைபெறும் சமயங்களிலும் பருவம் தப்பிய மழையால் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து விவசாயிகள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகினர்.

    முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பருவம் தவறி பெய்த மழையால் விளைந்த நெல் வீடு வந்து சேருமா என்று கவலையில் ஆழ்ந்தனர்.

    தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு செப்டம்பர் 1ம் தேதி முதலே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை தொடங்கினர்.

    கொள்முதல் மையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு 17.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் வெயிலில் உலர வைத்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர்.

    அவ்வப்போது பெய்யும் மழையால் உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

    இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    இந்த கோரிக்கையை அடுத்து கடந்த 15ம் தேதியில் இருந்து மத்திய அரசு அனுப்பித்த 4 பேர் கொண்ட குழுவினர் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    கள ஆய்வின் முடிவுகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி அதன் பின்னர் ஈரப்பத அளவு குறித்து தெரியவரும் என்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட விவசாயிகள் நேற்று வரை தங்கள் நெல்லை கொண்டு வந்து சாலைகளில் கொட்டி அதிக அளவில் கூலியாட்களை வைத்து காயவைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான‌ ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    இது ஒருபுறமிருக்க பல‌நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூடி கலந்து பேசி மாமுலான‌ முறையில்‌ கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×