என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வங்கி கணக்குகள் முடக்கம்: ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்
- பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
- நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
சென்னை :
அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்து, விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.
இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தவில்லை. இதையடுத்து, அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ''நான் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எம்.எல்.ஏ.-க்குரிய ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டுக்குரிய நிதியை பெறும் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கி விட்டனர். இதனால், தொகுதி நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, வங்கிக் கணக்குகள், நிலத்தை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை வரிவசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கூறியிருப்பதாவது:-
விஜயபாஸ்கருக்கு கடந்த 2011-12 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும்படி உத்தரவிட்டும், அவர் வரிபாக்கியை செலுத்தவில்லை. முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கில் கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கு தமிழ்நாடு அரசு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்து 226-ஐ செலுத்தியுள்ளது.
அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கப்படவில்லை. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால் சட்டப்படி சொத்துக்களை, வங்கி கணக்குகளையும் முடக்கி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமானவரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியாக உள்ள தொகையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பியும் அதையும் அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
விஜயபாஸ்கருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு அதன்பிறகு மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு நபர்களுக்கு விற்பதை தடுக்கவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்துக்குட்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சித்து வருகிறார்.
எனவே வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட எந்த அவசியமும் இல்லை என்பதால் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்