search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்
    X

    (கோப்பு படம்)

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்

    • காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    • சூரிய கிரகணத்தால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    முருக பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை‌ திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கின்றது.

    தொடர்ந்து சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடத்தப்பட்டு, வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

    இன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மற்றபூஜைகள் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது.

    31-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்சசியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்துள்ளனர்.

    Next Story
    ×