search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்கள் இலவச நீட் தேர்வு பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
    X

    அரசு பள்ளி மாணவர்கள் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    • மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பு, சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார்.

    இதுதொடர்பான திட்டங்கள் மற்றும் செயலாக்கங்களுக்கு 'பெல்லோ சிட்டிசன்', அவருக்கு உதவி செய்து வருகிறது. ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 3-வது ஆண்டாக, 2024-ம் ஆண்டு 'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பிளஸ்-2 படிக்கும் மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் www.aatrupadaifoundation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த மாதம் இறுதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் இலவச பயிற்சி பெறுவதற்காக சென்னைக்கு வந்து பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களை 63811 28698, 93633 68271 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×