search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆழமான நட்புறவு உள்ளது- ஆளுநர்  ஆர்.என்.ரவி
    X

    மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி (கோப்பு படம்)

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆழமான நட்புறவு உள்ளது- ஆளுநர் ஆர்.என்.ரவி

    • ஒரு சட்டமசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
    • சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத்தான் நான் இருக்கிறேனே தவிர, அதிகார எல்லைகளை மீறுவதற்காக அல்ல. ஒரு சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்கவும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அதைக் கிடப்பில் போடவும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்திருக்கிறது.

    அரசின் செலவினங்களுக்கான பண மசோதாவாக இல்லை என்கிற பட்சத்தில், மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் அப்படியே ஒப்புதல் கொடுத்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் எதிர்பார்க்கிறதோ, அதையே செய்கிறேன் சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசனம் வகுத்துள்ள எல்லைக்கு உட்பட்டதுதான்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றாலும் சரி, அமைச்சர்கள் என்றாலும் சரி, அவர்களிடம் நல்ல நண்பராக நான் பழகுகிறேன். அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. அரசியல் ரீதியாக என்ன பேசப்பட்டாலும், ஊடகங்களில் கருத்து கூறப்பட்டாலும், என்னை அது பாதித்ததில்லை. அதுதான் எங்களுக்கிடையேயான தனிப்பட்ட நட்புறவு.

    தி.மு.க. அரசுடன் நல்லுறவை அனுபவித்து வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர். அவருடன் எனக்கு ஆழமான நட்புறவு உள்ளது. அவர் இந்த மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் நல்லதைச் செய்யும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அவரது திறனுக்கேற்றபடி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை எனது முன்னுரிமையாக வைத்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டதாகும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் நல்ல பெயர் பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் எஸ்.சி., ஆதிதிராவிடர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தரவுகளை பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றங்களுக்கான தண்டனை விகிதமும் குறைவாகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கட்டும், ஒரு குறிப்பிட்ட கைதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தது. அதுபோல மற்றவர்களின் விடுதலையிலும் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும். அரசியல் சாசனத்தின் 142-வது ஷரத்து அளித்துள்ள அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    அதைச் செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே அதுதொடர்பான மனுக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பற்றி நான் ஏற்கனவே கூறியிருப்பதன்படி அது மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×