search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
    X

    தெருவிளக்கு வசதி கேட்டு மனு கொடுத்த ராமையன்பட்டி பகுதி பொதுமக்கள்.

    களக்காட்டை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

    • தமிழகத்திலேயே நாங்குநேரி தாலுகா தான் அதிக பரப்பளவு கொண்டதாக உள்ளது.
    • புதிதாக வீடு கட்ட, நிலத்தை அளக்க சுமார் 4 மாதம் காலதாமதம் செய்யப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவி குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதன்மூலம் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் எங்களது பொது பயன்பாட்டிற்காக 39 சென்ட் நிலத்தையும் அரசு வழங்கியது.

    நாங்கள் அந்த பகுதியில் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறோம். அங்கு மின் இணைப்பு வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுக்காலனி, சிவாஜி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் இணைப்புகள் வழங்க பாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுமதி கொடுத்த போதிலும், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்க காலதாமதம் செய்து வருகிறார்கள்.

    எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்பை ஒன்றியம் தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 1988-ம் ஆண்டு அம்பை தாலுகா அலுவலகம் சார்பில் புறம்போக்கு நிலத்தில் 109 ஏழை பெண்கள் மரம் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பயன்பெற்ற சிலர் மரங்களை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நாம் தமிழர் கட்சி வணிகர் பாசறை சார்பில் நாங்குநேரி தாலுகா இடையன்குளத்தை சேர்ந்த செல்வின் தலைமையில் பொது மக்கள் கொடுத்த மனுவில், தமிழகத்திலேயே நாங்குநேரி தாலுகா தான் அதிக பரப்பளவு கொண்டதாக உள்ளது.

    இங்கு அதிகமான மக்கள் வசித்து வருவதால் தாலுகா அலுவலகத்தில் எந்த ஒரு பணிக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. புதிதாக வீடு கட்ட, நிலத்தை அளக்க சுமார் 4 மாதம் காலதாமதம் செய்யப்படுகிறது.

    இந்த தாமதத்தால் 15 சதவீதம் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிடுகிறது. இதன்மூலம் 10 லட்ச ரூபாய்க்கு கட்ட வேண்டிய பணிகள் 12 லட்சம் ரூபாய் செலவாகிறது.

    எனவே 17 ஊராட்சிகள் கொண்ட களக்காடு ஒன்றியம், 27 வார்டுகள் கொண்ட களக்காடு நகராட்சி, 15 வார்டுகள் கொண்ட திருக்குறுங்குடி பேரூராட்சி இவற்றினை உள்ளடக்கி களக்காட்டை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×