search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவ திருப்பதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

    • ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.
    • ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவை குண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான நவதிருப்பதி கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் காலை 4மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்திலும் தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சயனகுரடு மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். காலை 5 மணி முதல் பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு விஸ்வரூபம், மதியம் 12.30 மணிக்கு திருமஞ்சனம் கோஷ்டி, மதியம் 2 மணிக்கு நித்தியல் கோஷ்டி, மாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இரவு 10.30 மணிக்கும், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மண்டகபடியின் சொர்க்க வாசல் இரவு 10.30 மணிக்கும் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவியுடன் பரமபத வாசலுக்கு இரவு 10.30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் எழுந்தருளினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரமசக்தி உமரிசங்கர், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், கோவில் ஆய்வாளர் நம்பி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத், ஆழ்வார் திருநகரி முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் கந்தசிவசுப்பு, ஆதிநாதன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் விஜயகுமார், முருகன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி, தேவராஜன், வெங்கடகிருஷ்ணன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பொதுமக்கள் சிறப்பு தரிசன கட்டணத்திலும், இலவச தரிசனத்திலும் பெருமாளை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

    Next Story
    ×