search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் கனமழை :கடலில் வீணாக கலக்கும் 2,500 கன அடி தண்ணீர்விவசாயிகள் வேதனை
    X

    கடலூர் மாவட்டத்தில் கனமழை :கடலில் வீணாக கலக்கும் 2,500 கன அடி தண்ணீர்விவசாயிகள் வேதனை

    கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடலூர், பண்ருட்டி ,நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, காட்டு மன்னார்கோவில் ,திட்டக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்தது.இந்த மழையானது நேற்று மதியம் வரை இருந்த நிலையில் மீண்டும் இரவு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற பகுதிகளில் தயார் நிலையில் இருந்ததோடு மழை நீர் வடிவதற்காகவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர்தென் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாத்தனூர் அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்த காரணத்தினால் கண்டரக்கோட்டை, மேல்பட் டாம்பாக்கம் வழியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர் பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கொமந்தாமேடு, மருதாடு தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இன்று காலை வரை விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 2 அணைக்கட்டு மற்றும் 4 தடுப்பணைகள் நிரம்பி கடலூர் கொமந்தாமேடு வழியாக 2500 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றும் நிலையில் இந்த தண்ணீர் கடலூர் மாவட்டத்திற்கு வராது

    அதற்கு மாறாக கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்த காரணத்தினால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. தற்போது மழை அளவு குறைந்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் படிப்படியாக தண்ணீர் ஓடுவது கணிசமாக குறையும். இது மட்டும் இன்றி கெடிலம் ஆற்றில் தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் சென்று வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. 2 நாட்கள் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் 2500 கன அடி தண்ணீர் வினாடிக்கு சென்று வரும் நிலையில் கடலில் வீணாக கலந்து வருவதால் இதனை தடுத்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் உயர்வதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    Next Story
    ×