என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சை பெரிய கோவிலுக்கு நன்கொடையாளர்கள் யானை கொடுத்தால் வளர்ப்பதற்கு தயார்- அமைச்சர் பேட்டி தஞ்சை பெரிய கோவிலுக்கு நன்கொடையாளர்கள் யானை கொடுத்தால் வளர்ப்பதற்கு தயார்- அமைச்சர் பேட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/01/24/1826048-15.webp)
சிவராத்திரி விழா தொடர்பாக தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நன்கொடையாளர்கள் யானை கொடுத்தால் வளர்ப்பதற்கு தயார்- அமைச்சர் பேட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிவராத்திரி விழாவுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் சார்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதன்படி விழா நடைபெறுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தஞ்சை வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர் கோவில் ஆகிய 5 இடங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகேயுள்ள திலகர் திடலில் மகா சிவராத்திரி விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏறத்தாழ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை திருக்கோவில் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை.
அந்தந்த கோவில் நிர்வாகம் தான் நடத்துகிறது.
யானையை நாம் காட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. யாராவது நன்கொடையாளர்கள் யானையை கொடுத்தால் கோவிலில் (தஞ்சை பெரிய கோவிலில்) வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள 1,250 திருக்கோவில் களுக்கும், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோவில்களுக்கும் என மொத்தம் 2,500 கோவில்களுக்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.1 லட்சம் வீதம் என இருந்ததை தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.50 கோடியை ஒரே தவணையில் தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்தார்.
ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்க அரசாணை வெளியிடப்படும். மற்ற கோவில்களுக்கு மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.
இதுவரை 22 மாவட்டங்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத் துக்கும் அதிகமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்பின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சதய விழாக்குழு தலைவர் செல்வம் மற்றும் அதிகா ரிகள் உடன் இருந்தனர்.