search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை ராஜவீதியில் ஒரு பக்க பார்க்கிங் முறை அமல்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறையும்
    X

    கோவை ராஜவீதியில் ஒரு பக்க பார்க்கிங் முறை அமல்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறையும்

    • தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது.
    • ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரின் மையப்பகுதி டவுன்ஹால் ஆகும். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தாமஸ் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, இடையர் வீதி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் டவுன்ஹால் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய சாலைகள் அனைத்திலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மளிகை சாமான்கள், இஞ்சி, பூண்டு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் இப்பகுதியில் உள்ளது. அத்தகைய கடைகளுக்கு ராஜவீதி வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    மேலும் நகைக்கடைகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே ராஜவீதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக காணப்படும். சரக்கு ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் ,நான்கு சக்கர வாகனங்களும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை இங்கு காண முடிகிறது.

    இதற்கிடையில் தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது. நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவையின் முக்கியமான பகுதி இப்பகுதி ஆகும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ராஜவீதியை பொறுத்த அளவு சற்று அகலமான சாலை தான். ஆனாலும் சாலைகளின் 2 புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால்தான் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாலையின் ஒரு புறம் மட்டுமே பார்க்கிங் என்ற முறை அமலுக்கு வந்தால் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க முடியும்.

    மேலும் சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ராஜவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் .

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×