என் மலர்
உள்ளூர் செய்திகள்
சீர்காழியில், அ.தி.மு.க.வில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா
- என்.எல்.சி. வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.
- குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.
அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மார்கோனி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
நீர் முறையாக வராததால் கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும்.
என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்களை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.