search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் தொடக்கவிழா
    X

    ஆனந்த குருகுலத்தை அறநிலையத்துறை மாநில ஆலோசனை குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் தொடக்கவிழா

    • உலக பொதுமறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
    • ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கிளை தொடக்க விழாவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் என்கின்ற ஆன்மீக கல்வி நிலையம் தொடங்கும் விழா பிறவிமருந்தீசர் கோவில் மங்களநாயகி மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் விமலா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜா, வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், தொழிலதிபர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் கனகராஜன் அறிமுக உரையாற்றினார். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆனந்த குருகுலம் என்ற அமைப்பினை இந்து சமய அறநிலையத்துறை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது,

    குழந்தைகளுக்கு இளம் பிராயத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளையும் திருக்குறள் போன்ற உலகப் பொதுமறைகளையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. வருங்காலத்தில் நல்ல விளைவுகளை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள் என்பது நிச்சயமான ஒன்று. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவாரம் பயிற்றுவிக்கும் ஓதுவார்களோடு இணைந்து ஒரு நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கினால் நமது நாடு உலக அரங்கில் இன்னும் மிகச்சிறந்த நாடாக திகழும். வந்திருக்கின்ற அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இது போன்ற ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். பெற்றோர்கள்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து முன்னாள் நகர் மன்ற தலைவர் பாண்டியன், ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் சிவக்குமார், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவர் ஸ்ரீதரன் ,நகரமன்ற உறுப்பினர் எழிலரசன், மாடன் நர்சரி பள்ளி நிர்வாகி முருகானந்தம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தணிகாசலம், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக திருவாரூர் ஆனந்த குருகுல மாணவர்களின் தேவார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×