search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மருத்துவ மனை துணை இயக்குனர். டாக்டர் ரமேஷ் பாபு, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளனர்.

    கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி

    • கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் மதிப்பிலான நவீன உயர் சிகிச்சை கருவிகள், மற்றும் 5.5 லட்சம் மதிப்பிலான பேரிடர் கால நவீன காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உபகரணங்கள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தும் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 31 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து நோயாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பாக நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக குப்பை கிடங்கு இல்லாதது குறித்தும், குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தது குறித்தும் யாரும் கேட்க திராணி இல்லாமல் இருந்து வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று புதிதாக பொறுப்பேற்று 3 மாதமான நிலையில் மேயர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முடிவடையாத நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பாலசுப்ரமணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி திமுக செயலாளர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனஞ்செயன், வி.ஆர். அறக்கட்டளை விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, செந்தில் குமாரி இளந்திரையன், சுபாஷிணி ராஜா , சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×