search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களின் உழைப்பை மதிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    மக்கள் களம் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார். 

    பெண்களின் உழைப்பை மதிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

    • மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் ‘மக்கள் களம்’நிகழ்ச்சி நடந்தது.
    • கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் 'மக்கள் களம்' என்ற மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்தில் நா. முத்தையாபுரத்திலும், பிச்சிவிளை பஞ்சாயத்தில் பிச்சிவிளையிலும், காயாமொழி பஞ்சாயத்தில் குமாரசாமிபுரத்திலும் நடந்தது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    மேலும் பெண்களுக்கு தையல் எந்திரம், சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ரூ. 60 லட்சத்து 5 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மொத்த 44 பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொதுமக்களாகிய நீங்கள் எந்தவொரு மனு அளிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் கலெக்டர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினராகிய நான் (கனிமொழி எம்.பி.), அரசு அலுவலர்கள் உங்கள் கிராமத்திற்கே வந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சி தான் மக்கள்களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இலவச பஸ் பயணம்

    தமிழ்நாடு அரசு தான் பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணம் இல்லாமல் பஸ் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுடைய உழைப்பை மதிக்கக் கூடிய வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டப்பணி கள் நடந்து வருகிறது.

    இவ்வாறு கனிமொழி பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர். தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார் என்று பேசினார்.

    மாலையில், கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமலி நகரில் உள்ள மீனவர்கள் 12 பேர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆன்றோ, பொங்கலரசி, பஞ்சாயத்து தலைவர்கள் மகாராஜன் (மேல திருச்செந்தூர்), ராஜேஸ்வரன் (காயாமொழி), காயாமொழி சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசில் நூகு, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×