search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கந்துவட்டி கும்பல்
    X

    2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கந்துவட்டி கும்பல்

    • வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் திண்ணப்பன் (வயது75). இவர் தனது மனைவி மீனாள் (64), மகன் அருணாச்சலம் (35), மருமகள் லட்சுமி (30), பேரன்கள் சித்தார்த் (12), நித்தின் (7) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    திண்ணப்பன் தனது மகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக இவரது வீடு பூட்டியே இருந்தது. வீட்டிற்குள் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வீட்டிற்கு சென்றபோது போலீசாரை தள்ளி விட்டு சிலர் தப்பி ஓடினர்.

    இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று போலீசார் பார்த்தனர்.

    வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    போலீசாரிடம் திண்ணப்பன் தெரிவிக்கையில், நான் தொழில் விஷயமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜாகருப்பையா என்பவரிடம் பணம் வட்டிக்கு வாங்கினேன். நானும் அவரும் 12 வருடங்களுக்கு மேல் ஒன்றாக தொழில் செய்து வருகிறோம். இதனால் அவரும் வட்டிக்கு பணம் கொடுத்தார். அதற்காக மாதந்தோறும் வட்டி தொகையை செலுத்தி வந்தேன்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை. இருந்தபோதும் அதன்பிறகு ராஜாகருப்பையா எனக்கு சொந்தமான சொத்துக்களை கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவு செய்து வட்டி தொகையை எடுத்துக் கொண்டார்.

    கடந்த சில மாதங்களாக நான் வாங்கிய பணத்துக்கு மேலும் பணம் தர வேண்டும் என என்னை மிரட்டி வந்தார். அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ரவி மற்றும் சரவணன் ஆகியோரை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர்.

    நான் அவசாகம் கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்தனர். கடந்த 17ந் தேதி இரவு எனது வீட்டிற்குள் வந்த கும்பல் எங்களிடம் இருந்த அனைத்து செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டனர். வாங்கிய கடனுக்கு பணம் எங்கே என கேட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 காரையும் எடுத்து சென்று விட்டனர். பின்னர் எங்களை ஒரே அறையில் அடைத்து பணம் கொடுக்கும் வரை வெளியே விடமாட்டோம் என தெரிவித்து பூட்டி விட்டனர்.

    இதனால் எனது பேரன்கள் 2 பேரும் பள்ளிக்குகூட செல்ல முடியவில்லை. எங்களால் இயற்கை கடனை கழிக்க கூட இயலவில்லை. 5 பேர் கொண்ட அடியாள் கும்பல் வீட்டிலேயே முகாமிட்டு சினிமா பாணியில் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

    எங்களிடம் இருந்த பத்திரங்கள், ஏ.டி.எம். அட்டை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய ராஜாகருப்பையா, டிரைவர் ரவி, சரவணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே 3 நாட்களாக ரியல்எஸ்டேட் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×