search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க ரூ.15 கூடுதலாக வசூலித்த நிறுவனத்திற்கு ரூ.7500 அபராதம்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க ரூ.15 கூடுதலாக வசூலித்த நிறுவனத்திற்கு ரூ.7500 அபராதம்

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    Next Story
    ×