என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்கோவில் பகுதியில் உள்ள உணவு-தேநீர் கடைகளுக்கு 12 கட்டுப்பாடுகள் நாகர்கோவில் பகுதியில் உள்ள உணவு-தேநீர் கடைகளுக்கு 12 கட்டுப்பாடுகள்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/27/1752629-10.jpg)
நாகர்கோவில் பகுதியில் உள்ள உணவு-தேநீர் கடைகளுக்கு 12 கட்டுப்பாடுகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சுத்தமாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
- சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்களுக்கு 12 கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
உணவகம் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக மாநகராட்சி மூலம் தொழில் உரிமம் பெற்று அவரவர் நிறுவனங்களில் வைத்திருக்க வேண்டும். ஓடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அனைத்து உணவகங்களிலும் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சமையல் செய்யும் இடத்தினை கடையின் உட்பகுதியில் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் புகை போக்கி எந்திரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலுக்குட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.
சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.அனைத்து உணவகங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வைக்கப்பட வேண்டும் . வர்ணம் பூசுதல் உள்ளிட்ட வருடாந்திர பராமரிப்பு நிறுவனங்களில் முறையான இடை வெளிகளில் செய்யப்பட வேண்டும்.உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.
சமையல் அறை உள்ளிட்ட உணவகம் மற்றும் தேநீர் விடுதியின் அனைத்து அறைகளில் தரை தளங்களும் நீர் புகாதவாறு உறுதியாகவும் , சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் . அனைத்து கடைகளிலும் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் . அனைத்து கடைகளின் முன் பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.
மேற்படி குறைபாடுகளை 10 தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய ேவண்டும். மேலும் தவறும் பட்சத்தில் கடை மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.