search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முட்டம் கடற்கரையில் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாட்டம் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    முட்டம் கடற்கரையில் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாட்டம் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக மீனவர் நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாநாட்டு பொதுக்கூட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் வைத்து நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகாகோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நகராட்சி மன்ற மீனவ தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகள், கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களும் திரளாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்த்து தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    மீன்பிடி படகுகள் ஆய்வு செய்வது ஏற்கனவே 3 ஆண்டுகள் என இருந்தது. அதை தற்போது ஒரு ஆண்டுகளாக ஒரு முறை படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட வேண்டும். கடலில் காணாமல் போன மீனவர்களை ஒரு ஆண்டு களுக்குள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்களுக்கு அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும். கட்டு மரங்களுக்கு 500 லிட்டர் மானிய மண்எண்ணை, விசைபடகுகளுக்கு 5 ஆயிரம் லிட்டர் மானிய மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன் வைக்கப்படுகிறது.

    மீனவர் தினத்தை யொட்டி வருகிற 19, 20-ந்தேதிகளில் கால்பந்தாட்ட போட்டி அம்மாண்டிவிளை ஜாண் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

    நாகர்கோவிலில் அமைந்துள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அலுவலகத்தில் 20-ந்தேதி பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. 21-ந்தேதி முட்டம் சின்ன மண்டபத்தில் வைத்து கடல் மீன் சமையல் போட்டி நடைபெறும். போட்டியில் பங்கெடுப்பவர் கடல் மீன் சமையலுக்கு தேவையான மீன், மசால், பாத்திரங்கள், எரிபொருள், ஸ்டவ்அடுப்பு முதலியவை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது முட்டம் பங்குத்சந்தை அமல்ராஜ், தமிழ்நாடு மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    Next Story
    ×