search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டாரில் இரவு நேரத்தில் பஸ் நிலையம் வராமல் பணிமனைக்கு செல்லும் அரசு பஸ்கள் - வயதான முதியோர்களை பாதியில் இறக்கி விட்ட நடத்துனர்
    X

    திருவட்டாரில் இரவு நேரத்தில் பஸ் நிலையம் வராமல் பணிமனைக்கு செல்லும் அரசு பஸ்கள் - வயதான முதியோர்களை பாதியில் இறக்கி விட்ட நடத்துனர்

    • குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப் படுகிறது
    • இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன

    கன்னியாகுமரி :

    1971-ம் ஆண்டு திருவட்டாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை திறக்கப்பட்டது. பின்னர் பஸ்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் 35 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டார் கேசவபுரம் ரோட்டில் ஸ்ரீராமன்கோணம் என்ற இடத்தில் புதியதாக பணிமனை மாற்றப்பட்டதை அடுத்து பணி மனை பஸ் நிலையமாக மாற்றப்பட்டது.

    திருவட்டார் பணிமனையில் இருந்து குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியா குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் அதிகமான பஸ்கள் இயக்கப்படுவதும் இங்கிருந்துதான்.

    சமீப காலங்களில் இரவு நேரம் குலசேகரம், பேச்சிப்பாறை, கடையாலு மூடு, குற்றியார் ஆகிய இடங்களுக்குச்சென்று திரும்பும் இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன.

    உதாரணமாக இரவு நேர கடைசி டிரிப் பஸ்சில் குலசேகரத்தில் இருந்து திருவட்டார் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வருபவர் பஸ்சில் திருவட்டார் என்ற பெயர் பலகையைப்பார்த்து பஸ்சில் ஏறுவார். திருவட்டாருக்கு டிக்கெட்டும் எடுப்பார். ஆனால் பஸ் காங்கரை சந்திப்பு வந்ததும் கண்டக்டர் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு பஸ் போகாது இறங்குங்க என்றவாறு பயணிகளை கீழே இறங்க வற்புறுத்துவார்.

    வேறு வழியின்றி பயணிகள் பஸ்சிலிருந்து இறங்குவர். அவர்கள் வேறு ஆட்டோ பிடித்தோ, நடந்தோ தான் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள வீட்டுக்கு செல்ல முடியும். இது தொடர்பாக இரவு நேர கடைசி டிரிப் காங்கரை சந்திப்பில் வரும்போது அடிக்கடி டிரைவர், கண்டக்டர்களுக்கும் பஸ் பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

    நேற்று முன் தினம் இரவில் திருவட்டார் பஸ் ஸ்டாண்ட் அருகில் வசிக்கும் வயதான தம்பதியை குலசேகரத்தில் இருந்து வந்த திருவட்டார் பெயர்பலகை போட்ட பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக காங்கரையில் வைத்து கீழே இறங்குமாறு கூற, அவர்கள் வேறு வழியின்றி அழுதுகொண்டே வண்டியில் இருந்து இறங்கி சிரமப்பட்டு நடந்து திருவட்டாருக்கு சென்று சேர்ந்தனர். இவ்வாறு அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இரவு நேரம் குலசேகரம் பகுதியில் இருந்து திருவட்டார் வரும் அனைத்து பஸ்களும் திருவட்டார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பின்பு, பணிமனைக்குச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×