search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்
    X

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்

    • திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர்ரெட்டி தகவல்
    • இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2-வது வருடாந்திர பவித்ர உற்சவ திருவிழா கடந்த 22-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் யாகசாலைபூஜை, உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் தீபாராதனை போன்றவை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி, துணை தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மோகன்ராவ், யுவராஜ், துணை செயல் அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, பக்த சேவா தலைவர் ஜெயராம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்தை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாலையில் யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாகுதி மற்றும் விசேஷ பூஜையும் நடந்தது. பின்னர் பகுமானம் அர்ச்சனை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெற்றது.

    இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச்சார்யலு தலைமையில் 7 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.

    பின்னர் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர் குழு தலைவர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடந்தது. இந்த பவித்ர உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் சராசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

    படிப்படியாக வாரந்தோறும் லட்டு பிரசாதம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லட்டு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பதியில் நடப்பது போன்று 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படும். இதற்காக சுவாமிகள் பவனி வருவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3 திருமணங்கள் நடந்து உள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×