search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

    • நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.
    • அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்

    கன்னியாகுமரி, ஆக.3-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 10-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடக்கிறது.

    அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.

    இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும்.

    Next Story
    ×