search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அரசு பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்காததால் மாணவிகள் திடீர் போராட்டம்
    X

    நாகர்கோவில் அரசு பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்காததால் மாணவிகள் திடீர் போராட்டம்

    • பெற்றோரும் பங்கேற்றதால் பரபரப்பு
    • வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 19-ந்தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு களை ஒதுக்கி வருகின்றனர்.

    அதற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள், வேறு பள்ளிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

    நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளியிலும் பிளஸ்-1 மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை பிளஸ்-1 சேர்க்கைக்காக ஏராளமான மாணவிகள், தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது சில மாணவிகளுக்கு அவர்கள் விரும்பி கேட்ட பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்காத 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோருடன், பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறுவயது முதல் ஒரே பள்ளியில் படித்த தங்களுக்கு விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து மாணவிகள் கூறுகையில், நாங்கள் சிறுவயது முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறோம். தற்போது பிளஸ்-1 படிப்புக்கு விருப்ப பாடத்தை கேட்டு நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தோம்.

    அந்த பிரிவில் சேர்வதற்காக இன்று பெற்றோரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தோம். ஆனால் நாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது. எங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களும், எங்கள் அளவிற்கு தான் மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

    எனவே எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என்றனர். மாணவிகளின் இந்தப் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×