search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பணிபுரியும் அலுவலகங்கள்-கல்வி பயிலும் இடங்களில் பாலியல் தொடர்பான புகார் அளிக்க உள் புகார் குழு அமைக்க வேண்டும்
    X

    பெண்கள் பணிபுரியும் அலுவலகங்கள்-கல்வி பயிலும் இடங்களில் பாலியல் தொடர்பான புகார் அளிக்க உள் புகார் குழு அமைக்க வேண்டும்

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    • ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும், கல்வி பயிலும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன் கீழ் உள் புகார் குழு அமைத்திட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும், வேலையிடத்திலும் அதன் பிரிவு பணியிடங்களிலும் 4 உறுப்பினர்கள் கொண்ட உள்ளக புகார் குழு எழுத்துப்பூர்வ ஆணையில் அமைத்திடல் வேண்டும். உள்ளக புகார் குழுவானது கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும். உறுப்பினர்-1 மூத்த நிலையிலுள்ள ஒரு பெண் உறுப்பினர். இவரே குழுவின் தலைமை அலுவலர் ஆவார். உறுப்பினர்-2 அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர், உறுப்பினர்-3 அலுவலகத்தில் பணிபுரிபவர், உறுப்பினர்-4 அலுவலகத்தில் பணிபுரிபவர் சட்டம் பணி அனுபவம் உள்ளவர், உறுப்பினர் 5 சமூகநல பணியாளர் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்.

    மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் இருக்க வேண்டும். உள் புகார் குழுவானது பணிபுரியும் இடங்களில் மற்றும் கல்வி பயிலும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு துணை புரிந்து, அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவிகளுக்கு தங்கள் பணியிடத்தில், நிறுவனங்களில் பாலியல் தொந்தரவு ஏதும் ஏற்படும் நிலையில் இக்குழு மூலம் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்கப்படவேண்டும். இந்த உறுப்பினர்கள் அடங்கிய உள்ளக புகார் குழு அமைத்து அதன் உறுப்பினர்கள் விவரம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    உள் புகார் குழு மற்றும் புகார் பெட்டி வைத்திடாத அலுவலகங்கள் கல்வி, தொழில் நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள் மற்றும் பெண்கள், மாணவியர் விடுதிகள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட பிரிவுகளின்படி ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இதுதொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×