search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
    X

    மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசியபோது எடுத்த படம்.

    குமரியில் 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார ரூ.4 கோடியில் திட்டமதிப்பீடு
    • மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள், விசைப்படகுகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்பொழுது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் குளச்சல் பகுதியில் உள்ள மீனவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கோவளம் பகுதியில் தூண்டில் வளைவுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறும்பனை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.

    மண்டைக்காடுபுதூர் முதல் குளச்சல் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சைமன் காலனி ஊராட்சி பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்தூர் ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்கி இருப்பதால் நடைபாதையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீனவர்கள் தங்களது படகுகளை புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். ஏற்கனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டத்தில் ஒரு மாதமும், கிழக்கு மாவட்டத்தில் ஒரு மாதமும் படகுகளை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும்.

    மேற்கு மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி குளச்சலில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். எந்த மாதத்தில் படகு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கோவளத்தில் தூண்டில் வளைவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பெரியகாட்டில் ரூ.6 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல்மிடாலம் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், பாமாயில் இந்த மாதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் மண்எண்ணெய், பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரும் பணிக்கு ரூ.4 கோடியே 8 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சைமன் காலனி பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பஞ்சாயத்து தலைவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்தூர் ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். கன்னியாகுமரியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×