search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

    • போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம்

    நாகர்கோவில், ஜூன்.10-

    குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய தேங்காபட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. ஓரளவு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும், கடல் அலை சீற்றத்திலும் சிக்கி அடிக்கடி விபத்துக்கள் நடந்தன..

    இதனை தொடர்ந்து மீனவர்களின் நலன் கருதி, துறைமுக முகத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், பல முறை சட்டமன்றத்திலும், முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து மத்திய அரசு நிதியும் கோரப்பட்டது. அதன்பிறகு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் தொடங்கபட்டு நடந்து வந்தது. ஆனால் இந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக மீனவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளுக்கு மூன்றாம் கட்டமாக, ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் நடந்து வந்தது.

    தற்போது வரை சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் பாறைகள் கொட்டப்பட்டு துறைமுக மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கடலில் போடப்பட்ட கருங்கல்கள் அனைத்தும் கடல் சீற்றத்தினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இதனால் துறைமுக மறு கட்டமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகும். இதனால் வரும் மாதங்களில் துறைமுக நுழைவாயில் வழியாக மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் பெரிய கருங்கற்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்காக பெரிய கருங்கற்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசும், மீன்வளத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து துறைமுக மறுகட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து மீனவர்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×