என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோட்டாரில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம் கோட்டாரில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/05/1772161-8.jpg)
கோட்டாரில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து போராட்டம் நடத்திய போது கல்வி அதிகாரிகள் சிலர் எங்களை ஆபாசமாக திட்டினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது என கூறினர்.
இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சுமூக தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.