search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் திடீர் மழை - மயிலாடியில் 4.2 மி.மீ. பதிவு
    X

    குமரியில் திடீர் மழை - மயிலாடியில் 4.2 மி.மீ. பதிவு

    • ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் காலை 37.85 அடியாக இருந்தது. 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் கொட்டி தீர்த்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    கடந்த ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிப்பிற்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மதியம் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்னல் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தது. இன்று அதிகாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் 1.8 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. அதிகாலை யில் பெய்த மழையின் காரணமாக இதமான குளிர் காற்று வீசியது. பின்னர் காலையில் வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கி யது

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.85 அடியாக இருந்தது. அணைக்கு 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 592 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. அணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.51 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 1192 தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. வழக்கமாக பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் அணைகள் பிப்ரவரி 26 -ந் தேதி மூடப்படுவத வழக்கம்.

    ஆனால் கடை மடை பகுதிகளில் விவசாயம் கருகும் நிலையில் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மார்ச் 20 -ந்தேதி வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×