search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது
    X

    மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது

    • சின்னமுட்டத்தில் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்
    • மீன்பிடிவலைகளையும் மீனவர்கள் தயார்படுத்துகிறார்கள்

    கன்னியாகுமரி, ஜூன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல்மாதம் 15-ந்தேதிமுதல் தடை அமுலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் இன்றுநள்ளிரவுடன் முடிவடையஉள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த மீன்பிடி தடை காலம் முடிவடைய உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்னமுட்டத்தில் உள்ள படகுகட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் பச்சை நிற வர்ணம் தீட்டுவது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.இந்த விசைப்படகுகள் நாளை இரவு 9 மணிமுதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்றே களைகட்ட தொடங்கி விட்டது.

    Next Story
    ×