search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே மீன் ஏற்றி சென்ற டெம்போ மரத்தில் மோதி கவிழ்ந்தது வடநாட்டு பெண் படுகாயம்
    X

    கன்னியாகுமரி அருகே மீன் ஏற்றி சென்ற டெம்போ மரத்தில் மோதி கவிழ்ந்தது வடநாட்டு பெண் படுகாயம்

    • நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.
    • கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.

    இந்த டெம்போவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவியான ராஜீவ் (வயது 31), டிஜினா (28) ஆகியோரும் அங்குள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை செய்வதற்காக சென்றனர். இந்த டெம்போ அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் செல்லும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் அந்த டெம்போவில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த டிஜினா (28) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் ராஜீவ் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி அந்த டெம்போவில் படுகாயத்துடன் இருந்த டிஜினாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×