search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டையன்விளை பகுதியில் உறிஞ்சி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
    X

    கட்டையன்விளை பகுதியில் உறிஞ்சி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

    • பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
    • இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

    அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×