search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பனி உலகம்-ஆஸ்திரேலிய பறவைகள் பொருட்காட்சி.
    X

    நாகர்கோவிலில் பனி உலகம்-ஆஸ்திரேலிய பறவைகள் பொருட்காட்சி.

    மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் நகரில் கடந்த 17 ஆண்டுகளாக நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனம் உலக அதிசயங்கள் மற்றும் பல்வேறு அதிசயங்களை தத்ரூபமாக வடிவமைத்து, குமரி மாவட்ட மக்களை அதிசயிக்க வைத்து வருகிறது.

    இந்த நிறுவனம் 18-வது ஆண்டாக இந்த ஆண்டு "பனி உலகம் (ஸ்னோவேர்ல்டு)-ஆஸ்திரேலிய பறவைகள்" என்ற பெயரிலான பொழுது போக்கு பொருட்காட்சியை, நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அமைத்துள்ளது.

    பனிமலைக்கு சென்று வந்ததை நினைவுபடுத்தும் வகையில் பனிக்கட்டிகளால் ஆன மலையை உருவாக்கியும், ஆஸ்திரேலியாவில் உள்ள பறவைகள், விலங்குகளை தத்ரூபமாக வடிவமைத்தும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

    இந்த பொருட்காட்சியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டு இருந்த ஜில்லென்ற பனிமலை, ஆஸ்திரேலிய பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டீனா கோகிலவாணி, கவுன்சிலர்கள் ராணி, ரமேஷ், ஸ்ரீலிஜா மற்றும் கவுன்சிலர்கள், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், வக்கீல் சதாசிவன், நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஏ.பாரூக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட் காட்சி நிறுவன பாரூக் கூறியதாவது:-

    மக்களின் பேராதரவை பெற்ற ராட்டினங்களுடன் கூடிய "ஸ்னோ வேர்ல்டு-ஆஸ்திரேலிய பறவைகள்" பொருட்காட்சி 20-ந்தேதி தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறும். இந்த பொருட் காட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள், சமையலறை சாதனங்கள், சிறுவர்க ளுக்கான விளை யாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு சாதனப்பொருட்கள், நாற்காலி, ஷோபா கம் பெட்டுகள், டிரஸ்சிங் டேபிள், பெட்ஷீட்டுகள், தரைவிரிப்புகள், நிலம் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் இந்த பொருட்காட்சியில் அரங்கு கள் அமைத்துள்ளன.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நாவிற்கு சுவையான பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், சோலாப்பூரி, பானிபூரி, டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், டீ-காபி, மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உள்ளிட்ட சிற்றுண்டி கடைகளும் இடம் பெற்றுள்ளன.

    குடும்பத்தோடு விளையாடி மகிழ ஜெயிண்ட் வீல், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், கோஸ்டர், பேன்சி கார்கள், மினி ரெயில், ஹெலிகாப்டர் மற்றும் பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இரவை பகலாக்கும் மின்ஒளியில் நடைபெறும் இந்த பொருட்காட்சி கோடை கால விடுமுறை முழுவதும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×