என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினம் அங்காளம்மன் கோவில் திருவிழா

- அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது.
- இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பன்னீர்செல்வம் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
நாளை மகா சிவராத்திரி முன்னிட்டு அன்று இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் இரவு விரதம் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அங்காள பரமேஸ்வரி கோவில் தங்களது நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், அணிந்து ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக வந்து காவேரிப்பட்டணம் சுடுகாட்டில் நேர்த்திக்கடனாக வலம் வருவர்.
அங்காளம்மன் திருத்தேர் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து சுடுகாடு சென்றடையும். அப்பொழுது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வழியெங்கும் அம்மன் தேர் மீது உப்பு, முத்துக்கொட்டைகளை வீசுவார்கள்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் அம்மனை தரிசிக்க காவேரிப்பட்டணம் ஆண்டுதோறும் வருவார்கள். அன்று சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு மேல் காவேரிப்பட்டணத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அன்று இரவு சுடுகாட்டில் திருத்தேரில் அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டு தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரும்போது ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்வார்கள்.
அடுத்த நாள் 20-ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஜெத்து, பாபி உற்சவம் முக்கிய வீதி வழியாக நடைபெறும் 21-ம் தேதி சாமி தென்பெண்ணை ஆற்றில் இருந்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்து அக்னிகுண்டம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெறும்.
22 -ம் தேதி காலை மகா அபிஷேகம் இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்
23-ம் தேதி காலை சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் நீராட்டு நடைபெறும் இரவு நகர் முழுவதும் சுவாமி பல்லக்கு உற்சவம் நடைபெறும். 24-ம் தேதி காலை கொடி இறக்கல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.