search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிப்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    பள்ளிப்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது.
    • நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது. பயங்கர இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள லவா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு அருகே இருக்கும் சானா குப்பம் கிராமத்தில் லவா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் சிதைந்து போனது.

    பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பள்ளிப்பட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அந்த கிராமம் தீவு போல் மாறியது.

    மேலும் பள்ளிப்பட்டு வடக்கு பகுதியில் இருக்கும் ஆந்திர மாநிலம் புல்லூர் காட்டுப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் லவா ஆறும், பள்ளிப்பட்டுக்கு மேற்கு பகுதியில் அம்மபள்ளி என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகும் குசா ஆறும் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ஒன்றாகி கொசஸ்தலை ஆறாக பாய்கிறது.

    இந்த ஆற்றில் லவா ஆற்றில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் கலந்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராம பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்று இந்த வெள்ளப்பெருக்கை பார்த்து வியந்தனர்.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றில் நெடியம் அருகே கடந்த மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த தரைப்பாலம் மேலும் சேதமடைந்து பாலத்தின் மீது வெள்ளம் ஓடியது.

    இதனால் நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மழை காலத்தில் சேதம் அடைந்த இந்தப் பாலத்தை அதிகாரிகள் இது நாள் வரை சீர்செய்யாமல் மண்ணைக் கொட்டி அதை தற்காலிகமாக சீர்செய்து இருந்ததால், தற்போது பெய்த கன மழையில் அந்த பாலம் மேலும் சேதம் அடைந்துள்ளது.

    Next Story
    ×