search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தபோது எடுத்தபடம்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2017-ல் இருந்து இந்த ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊன தடுப்பு முகாம், தோல் நோய் முகாம், பயிற்சிகள், தொழிற்சாலைகளின் பரிசோதனை, களப்பணி நோய் கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஆந்திராவில் உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக 5 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் நெல்லை நகர்புற பகுதிகளில் தொழுநோய் ஒழிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் 38 பேருக்கும், நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை 51 பேரும் புதிய நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டு நவீன கூட்டுமருந்து சிகிச்சை மூலம் குணமடைந்து வருகின்றனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பு முகாம் மூலம் நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

    நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாத்தில் உள்ள மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) அலுவலகம் மூலம் வேறு உதவிகள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு உதவித்தொகை போன்றவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள நோயாளிகள் 191 பேர் மாதந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் பெற்று வருகின்றனர். உதவி தேவைப்படுவோர் அல்லது நோய் பற்றிய தாக்கம் உள்ளவர்கள் இந்த அலுவலகத்தை திங்கட்கிழமை தோறும் நேரில் சென்று தெரிந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) அலார் சாந்தி, இணை இயக்குநர் (பொறுப்பு) நலப்பணிகள் ராமநாதன், துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) வெள்ளைசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ராஜேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணைஇயக்குநர் (தொழு நோய்) பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×