search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மீட்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    (கோப்பு படம்)

    மீட்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    • வழக்கில் இருந்து விடுதலை ஆனவர்கள் சிலைகள் மீது உரிமை கோர முடியாது.
    • குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிமை கோரினால், நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

    சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கோவில் நிர்வாகம் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடக்கூடாது என்றும், வழக்கில் தொடர்புடைய சிலைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் தொன்மை வாய்ந்தவை என தொல்லியல்துறை சான்றளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசில் அளித்த தகவலின்பேரில் வெளிநாடுகளில் இருந்து 91 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளது என்று கூறினார்.

    அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் தமது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.

    அதேநேரம், விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என்பதற்காக, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிமை கோர முடியாது. மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட கோவில் அல்லது அரசு அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

    ஒருவேளை இந்த பொருட்களுக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தரப்பில் உரிமை கோரினால், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். எழும்பூர் நீதிமன்றம் இவர்கள் மீதான பழைய வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×