search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
    X

    ஆர்.என்.ரவி        பொன்முடி

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

    • பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல.
    • பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மத்திய இணை மந்திரி முருகன் பங்கற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிற நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக் கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.

    அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.

    துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் அலுவலகம். தற்பொழுது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் அழைப்பிதழ் தயாரிப்பதிலும் தலையிட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளது.

    வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவர் முதலில் பேசுவதே மரபு ஆகும்.

    ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளது. இணை வேந்தருக்கு பிறகு கௌரவ விருந்தினர் அதன் பிறகு இறுதியாக வேந்தர் என்று அமைந்துள்ளது.

    இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கௌரவ அழைப்பாளர் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் அவர் மரபு படி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி Chancellor அடுத்து Pro-Chancellor ஆவார்.

    அதன் அடிப்படையிலேயே நிமிடத்திற்கு நிமிட நிகழ்வு (Minutes tominutes ) தயாரிக்கப்பட வேண்டும். இது மரபு மீறும் செயல் மட்டும் அல்லாமல் ஆளுநர் அலுவலகம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் கூட தலையிடத் தொடங்கி உள்ளதை வெளிப்படுத்துகிறது.

    பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உள்ளதால் மரபை பின்பற்றி இறுதியாக இணை வேந்தர் அதன் பின்னர் வேந்தர் என்று நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த வேண்டும்.

    பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.

    பட்டமளிப்பு விழா நிமிடத்திற்கு நிமிட நிகழ்வில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப் படாததால் இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×