என் மலர்
உள்ளூர் செய்திகள்

274 கிலோ கஞ்சா பறிமுதல்
- மதுரையில் 274 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
- 248 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
நடப்பு ஆண்டில் மட்டும் 274 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 137 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டு உள்ளது. இதனை மீறியவர்களை தடுப்பு காவலில் கைது செய்துள்ளோம்.
குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் சீல் வைக்கப்பட்டது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் 4 கஞ்சா வழக்குகளில் 13 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாநகரில் கஞ்சா விற்ற 68 பேரிடம் சுமார் ரூ.67 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 வழக்குகளில் அசையா சொத்துக்களை முடக்கும் பணி நடந்து வருகிறது.
பள்ளி- கல்லூரி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பது சமூகத்திற்கு தீங்கு விளை விக்கும். மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களில் இதுவரை 666 விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி அருகில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்வோர் மற்றும் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குபவர்கள் பற்றி 0452-2520760, 83000-21100 தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






