search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரியில் கடும் வெயிலிலும் மலையேறிய பக்தர்கள்
    X

    சதுரகிரியில் கடும் வெயிலிலும் மலையேறிய பக்தர்கள்

    • சதுரகிரியில் கடும் வெயிலிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
    • காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந்தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்- சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடைகாலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.

    மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×