search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
    X

    மீனாட்சி அம்மன் கோவில்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுமா?

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம்

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைெபறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் அதிக அளவில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்களுக்கு 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பொது தரிசனமும் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இந்த கோவிலில் குறைந்த அளவு கூட்டம் இருந்தாலும் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கியூ வரிசைகளை அமைத்து நேரடியாக தரிசனம் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தால்கூட பெரிய கூட்டம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

    இதனால் வெளியூர் பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் பொது தரிசனத்திற்கு எவ்வளவு கூட்டம் உள்ளதோ? அதே அளவுக்கு சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை இங்குமட்டும்தான் காண முடிகிறது. அதுவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய தனி கட்டணம், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய தனி கட்டணம் என 2 வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மேலும் கோவிலில் நுழையும்போது செல்போன்களும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கும் தனி கட்டணம் உள்ளது. இதுமட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் கட்டுபாடுகளை மீறி அழைத்து செல்லப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தாலும் அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பூஜை நேரங்களில் மணி கணக்கில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அப்போது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பெல்லாம் நேரடியாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தற்போது நீண்ட கியூ வரிசை பாதைகளை அமைத்து கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டம் இருப்பதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வரிசை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் தேவையின்றி நேர விரையம் ஏற்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    கோவிலில் பல சிலைகள் சேதமாகி உள்ளது. அவைகளை அவ்வப்போது சீரமைத்தால் கோவில் இன்னும் பொலிவுடன் திகழும். ஆனால் கும்பாபிஷேக காலங்களில் மட்டுமே திருப்பணிகள் செய்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

    கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டுமின்றி சிறப்பு கட்டண வசூல் உள்பட பல்வேறு வருமானங்கள் உள்ளது. அதில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வதில்லை. உபயத்தில் மட்டுமே பணிகளை செய்கின்றனர். கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

    மேலும் உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×