search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி
    X

    ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

    • திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது.

    திருமங்கலம்

    மதுரை-நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்லும் இந்த ரெயில் நிலையங்களில் சென்னை, பெங்களூர், புனலூர் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றனர்.

    சமீபத்தில் மதுரையில் இருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது. இதனால் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரெயில் நிலையம் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

    கட்டிடபணிகள் நிறைவடைந்த 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்பு இந்த புதிய கழிப்பிடம் திறக்கப் படாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. இதே போல் ரெயில்வே நிலையத்திற்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொது கழிவறையும் திறக்கப் படாமல் காணப்படுகிறது. ரெயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமெண்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல்பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் ரெயில்கள் வரும் வரையில் நிற்கவேண்டியுள்ளது. பயணி களுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரெயில் பயணிகளின் முக்கிய தேவை யான குடிநீர் வசதி திருமங்கலம் ரெயில்வே நிலையத்தில் இல்லை. இங்குள்ள 2 பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீ ருக்கு பதில் காற்றுதான் வருகிறது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இது தவிர முதலாம் பிளாட்பாரத்தை உயர்த்தவும், அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலில் ஏறி இறங்க பயணிகள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் நிலையத்தில் நடந்து செல்ல இயலாது. ஏனெனில் இங்கு தெருவிளக்கு எரிவதில்லை. வளாகம் இருளாக காணப்படுகிறது.

    முதல்பிளாட்பாரத்தில் ரெயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் ரெயிலில் ஏற இயலவில்லை. இங்கு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போது மெட்ரோ ரெயில் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரெயில் நிலையம் வசதிகளை ஏற்படுத்தி தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும்.

    Next Story
    ×