search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன்
    X

    உசிலம்பட்டி நகராட்சி கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.

    நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன்

    • பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×