search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிய தனியார் பள்ளிகள்
    X

    பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிய தனியார் பள்ளிகள்

    • தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி காரணமாக மதுரையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.
    • கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கூடத்தில், மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பள்ளிகூடம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 'கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்புக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்' என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இருந்தபோதிலும் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் 300 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், இன்று வழக்கம் போல திறந்து இருந்தன. எனவே மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'மதுரை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஏராளமான வக்கீல்கள், இன்று மதுரை உயர்நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு திரண்டு வந்தனர். அப்போது பலியான கள்ளக்குறிச்சி மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வக்கீல்கள், 'தனியார் கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் பள்ளிமூடல் மிரட்டலை தடுத்து நிறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    Next Story
    ×