search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது
    X

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது

    • ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
    • ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

    இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×