என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாபநாசம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்றவர் கைது: வீட்டில் வைத்து அச்சடித்தது அம்பலம்
- ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்துள்ளார்.
- ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சமீர் (வயது 28).
இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்ப வரது மகன் ஆசைத்தம்பி (55) வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து ¼ கிலோ கத்தரிக்காய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், நோட்டில் சந்தேகம் ஏற்படவே அருகே காய்கறி வாங்கி கொண்டிருந்த சுடலையாண்டி என்பவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது.
உடனே ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை முகமது சமீரும், சுடலையாண்டியும் சேர்ந்து சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் விசாரணை நடத்தியதில் அவர் தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அந்த நோட்டை கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 25 எண்ணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக முகமது சமீர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்.