search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்காடு, பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
    X

    மாங்காடு, பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வடிந்தது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆனால் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை பூந்தமல்லி பகுதிகளில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகர், மேல்மா நகர், பிராட்டிஸ் சாலை, அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை திருவேற்காடு ராஜீவ் நகர், ராஜாங்குப்பம், எஸ்.பி.நகர் குடியிருப்பு, கோலடி, நூம்பல், ஏழுமலை நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மாங்காடு சீனிவாசநகர், பத்மாவதி நகர், ஓம்சக்தி நகர், ஸ்ரீசக்ரா நகர் பகுதிகளில் தெருக்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி நகர், ராயபுரம் பனைமரத் தொட்டி, கல்மண்டபம் சாலை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் வைத்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். கோயம்பேடு ரெயில் நகரில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. சாலைக்கு மேலே ஒரு அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.


    காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அருந்ததி பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதையடுத்து மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    ஒவ்வொரு பருவமழையின் போதும் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் நோயாளிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    செங்கல்பட்டு அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கியுள்ள நீரில் இருந்து பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர். அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளம் காட்டாறு போல் சீறிப் பாய்கிறது. இதனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    Next Story
    ×