search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்ட கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
    X

    கோவை மாவட்ட கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    • தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.
    • தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது.

    கோவை,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த பஸ்கள் தமிழகத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் சென்று விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    6000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இருந்த நிலையில் 20-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் ஓடாமல் மினி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு புதர் மண்டி கிடப்பதை கண்கூடாக பார்க்கிறோம். டீசல் விலை உயர்வு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால் பஸ்களை இயக்குவது இல்லை என்று மினி பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இது நாள் வரையிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    கிராமப்புறத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மினி பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×