search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தமிழ் முருகன் மாநாடு: ஆயத்த பணிகள் குறித்து  சேகர்பாபு ஆய்வு
    X

    முத்தமிழ் முருகன் மாநாடு: ஆயத்த பணிகள் குறித்து சேகர்பாபு ஆய்வு

    • பழனியில் வருகிற 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு.
    • பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி மும்முரம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற உள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்காக பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி முகூர்த்தக்கால் நடும் பணியுடன் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாட்டு பந்தலில் பழனி மலைக்கோவிலின் ஓவியம், முருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மற்றும் முருகன் தொடர்பான படங்கள் வரையப்பட்டு வருகின்றன.

    மேலும் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு கட்டுரைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மாநாட்டு நிறைவில் உரிய பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.

    மேலும் விழா மாநாட்டு மலர் தயாரிப்பு, பக்தர்கள் தங்கும் இடம், வெளிநாட்டு ஆன்மீக அன்பர்கள் தங்கும் விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் சுகாதாரமாக வழங்கவும், கழிப்பிட வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 3 முறை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவுறுத்தி உள்ளார்.

    இன்று மீண்டும் பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாடு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி. பிரதீப், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×