என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து 3½ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள்
- நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.
இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.